மோதூர் - விசிறிக்கல் (தாய்த்தெய்வம்)

அமைவிடம் - மோதூர் - விசிறிக்கல் (தாய்த்தெய்வம்)
ஊர் - மோதூர்
வட்டம் - பாலக்கோடு
மாவட்டம் - தருமபுரி
வகை - ஆந்த்ரோபோமார்பியா-பறவைக்கல்/விசிறிக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - விசிறிக்கல், கல்வட்டங்கள், தாழி, கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை

விளக்கம் -

விசிறிக்கல் எனப்படும் நினைவுச் சின்னங்களுள் ஒன்றான பறவைக்கல் மோதூர் என்னும் ஊரில் ஈமச்சின்னக் காட்டில் காணப்படுகின்றது. இக்கல் ஈமக்காட்டில் கல்வட்டத்தின் நடுவே பறவை போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தாய்த்தெய்வ வழிபாட்டின் குறியீடாகக் கருதலாம். மோடு, மோட்டாள், மோடி என்பது தாய் தெய்வங்களின் வயிற்றைக் குறித்த பெயர்களாகும். பெரிய வயிறு படைத்த தாய்த்தெய்வம் தமிழ்ச்சமூகத்தின் வளமைச் சடங்கின் அடையாளமாகும்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - கோ.சசிகலா
சுருக்கம் -

          தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையின் மேற்கில், தருமபுரிக்கு வடமேற்கே 15 கி.மீ. தொலைவில் மோதூர் அமைந்துள்ளது. மோதூர் தட்சிணப்பதம் என்று பண்டையக் காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய NH7 வழித்தடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பெருவழியாகும். இவ்வூர் பெருவழிப்பாதையில் அமைந்திருப்பதால் ஏராளமான தொல்லியல் பண்பாட்டுக் கூறுகளைப் பெற்று விளங்குகின்றது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மோதூரில் (2004-05) நடத்திய அகழாய்வு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கது ஆந்த்ரோமார்பியா எனப்படும் விசிறிக்கல் ஆகும். தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள இவ்வகை ஈமச்சின்னத்தில் மோட்டூர் பறவை வடிவக் கல்லே மிகப் பெரியது ஆகும். இந்நடுகல் தாய்த்தெய்வம் என்றும் அதிதி என்றும் வரலாற்றாய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.